காலை உணவு திட்டத்தை ஒப்படைத்து முழுநேர பணியாளராக அறிவிக்க கோரிக்கை
காலை உணவு திட்டத்தை ஒப்படைத்து முழுநேர பணியாளராக அறிவிக்க கோரிக்கை
UPDATED : ஆக 17, 2024 12:00 AM
ADDED : ஆக 17, 2024 11:42 AM

திருச்செங்கோடு:
காலை உணவு திட்டத்தை, சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் வசம் ஒப்படைத்து, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை முழுநேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என, மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றிய, மாவட்ட பொதுக்குழு கூட்டம், திருச்செங்கோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் கலையரசன் தலைமை வகித்தார். மாநில தலைவர் மாதையன், பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, துணைத்தலைவர் பயாஸ்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரையும், அரசு ஊழியர்களாக்க வேண்டும். தற்போது பெற்று வரும் சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும்.
முதல்வரின் காலை உணவு திட்டத்தை, சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் வசம் ஒப்படைத்து, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை முழுநேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள காலி பணியிடங்களை கல்வித்தகுதிக்கு ஏற்ப சமையலர், உதவியாளர்களுக்கு, 5, 10 ஆண்டு என்ற அரசாணையை பரிசீலனை செய்து நிபந்தனைகள் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னாள் மாநில தலைவர்கள் மாதப்பன், ராஜேந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.