முதுநிலை டாக்டர் கவுன்சிலிங் வெளிப்படையாக நடத்த கோரிக்கை
முதுநிலை டாக்டர் கவுன்சிலிங் வெளிப்படையாக நடத்த கோரிக்கை
UPDATED : மார் 14, 2025 12:00 AM
ADDED : மார் 14, 2025 11:45 AM
சென்னை:
அரசு சாரா முதுநிலை டாக்டர்களுக்கான கவுன்சிலிங் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வெளிப்படைத்தன்மையுடன், கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ரெசிடென்ட் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 1,200 முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளன.
இதில், 50 சதவீத இடங்கள், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள, 50 சதவீத இடங்கள் அரசு சாரா டாக்டர்களுக்கு ஒதுக்கப்படும்.
முதுநிலை மருத்துவ படிப்பை முடித்ததும், அரசு டாக்டர்கள் தொடர்ந்து பணியில் நீடிப்பர். அரசு சாரா டாக்டர்கள், ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நடக்க வேண்டிய அரசு சாரா டாக்டர்களுக்கான பணி ஒதுக்கீடு கவுன்சிலிங் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங்கை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என, தமிழ்நாடு ரெசிடென்ட் அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்க செயலர் கீர்த்திவர்மன் கூறுகையில், முதுநிலை அரசு சாரா டாக்டர்களுக்கான பணியில், எந்தெந்த இடங்கள் காலியாக உள்ளன. அதில், சீனியாரிட்டி அடிப்படையில், எவ்வளவு இடங்கள் உள்ளன போன்ற விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
மேலும், கவுன்சிலிங் தேதியை முன்கூட்டியே தெரியப்படுத்தி, நேர்மையாக நடப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும், என்றார்.