பொதுத்தேர்வு மையங்களுக்கான எழுதுபொருட்கள் செலவை உயர்த்தி வழங்க கோரிக்கை
பொதுத்தேர்வு மையங்களுக்கான எழுதுபொருட்கள் செலவை உயர்த்தி வழங்க கோரிக்கை
UPDATED : ஏப் 01, 2025 12:00 AM
ADDED : ஏப் 01, 2025 08:07 AM
பொள்ளாச்சி :
பொதுத்தேர்வு மையங்களுக்கான எழுது பொருட்கள் செலவினத் தொகையை, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆண்டுதோறும், பிளஸ் 2, பிளஸ் 1, மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
பெரும்பாலும், அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், மையத்தில், 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவதாக இருந்தால், எழுதுபொருட்கள் செலவினங்களுக்காக, 2,400 ரூபாய்; 250க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால், 1,400 ரூபாய் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பாடத்தேர்வுக்கும் இந்த தொகையை பயன்படுத்தியே, விடைத்தாள்கள் கட்டு பிரிக்கப்பட்டு, காடா துணிப்பைக்குள் பாதுகாப்பாக வைத்து, அரக்கு, 'சீல்' வைக்கப்படுகிறது.
ஆனால், ஒவ்வொரு தேர்வின்போது, நான்கு முதல் ஐந்து கட்டுகள் வரை பிரித்து, துணிப்பைக்குள் வைக்க வேண்டியிருப்பதால், அதற்கான செலவினங்கள் அதிகரிப்பதாக, முதன்மை கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சமீபத்தில், பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிந்தது. அத்தேர்வுகளுக்காக, பேப்பர், கவர், பசை, அரக்கு, ஸ்டேப்ளர், கத்தி, நுால் உள்ளிட்டவை வாங்க, இந்த தொகை பயன்படுத்தப்பட்டது.
ஆனால், கட்டுக்கு ஏற்றார்போல, ஒரு துணிப்பை தைக்க, டெய்லருக்கு, 10 முதல், 20 ரூபாய் செலவிட வேண்டி உள்ளது. அவ்வகையில், ஒவ்வொரு வகுப்பு தேர்வு முடிவின் போதும், 25 துணிப்பை வரை தேவைப்படும் என்பதால், அரசு வழங்கும் தொகை போதுமானதாக இல்லை.
குறைந்தபட்ச தொகையை பயன்படுத்தி எழுது பொருட்கள் வாங்க முடிவதில்லை. இதனால், விலைவாசிக்கு ஏற்றார்போல எழுது பொருட்களுக்கு ஒதுக்கப்படும் செலவினத் தொகையை, 5,000 முதல், 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

