நர்சிங், பார்மஸி மாணவர்களுக்காக ரூ.4 கோடியில் ஆராய்ச்சி மையங்கள்
நர்சிங், பார்மஸி மாணவர்களுக்காக ரூ.4 கோடியில் ஆராய்ச்சி மையங்கள்
UPDATED : அக் 30, 2025 07:34 AM
ADDED : அக் 30, 2025 07:35 AM

கோவை:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலை நிதியுதவியுடன், கோவை அரசு மருத்துவக்கல்லுாரியில், நர்சிங் மற்றும் பார்மஸி மாணவர்கள் ஆராய்ச்சிகளில் பங்கெடுக்கும் வகையில், பிரத்யேகமாக, 4 கோடி ரூபாயில் இரண்டு மண்டல ஆராய்ச்சி மையங்கள் அமைய உள்ளன.
கோவை அரசு மருத்துவக்கல்லுாரியில் 2016 முதல் (எம்.டி.ஆர்.யு.) பல்நோக்கு ஆராய்ச்சி மையம் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் செயல்படுகிறது. இதன் வாயிலாக, மருத்துவ மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள், டாக்டர்கள் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது. தற்போது நர்சிங், பார்மஸி மாணவர்களும் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நோக்கில் பிரத்யேக மையங்கள் அமைய இருக்கின்றன.
அரசு மருத்துவக்கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் சுஜாதா கூறியதாவது:
மருத்துவத்திலும் ஆராய்ச்சிகள் அதிக அளவில் அவசியம். பல்வேறு மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. பல்நோக்கு ஆராய்ச்சி மையத்தின் கீழ், இதுவரை 59 ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 27 நிறைவு பெற்றுள்ளது. பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
நர்சிங், பார்மஸி படிக்கும் மாணவர்கள் படிப்பு, வேலை என்று சென்று விடுகின்றனர். இவர்களையும் ஆராய்ச்சிகளில் ஊக்குவிக்கும் நோக்கில், பிரத்யேகமாக இரண்டு மண்டல மையங்கள் கல்லுாரி வளாகத்தில் அமைய உள்ளன.
இதற்கான இடம் தேர்வு செய்து விட்டோம். இரண்டு மையங்களுக்கும் தலா 2 கோடி வீதம் 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

