UPDATED : ஆக 18, 2025 12:00 AM
ADDED : ஆக 18, 2025 04:32 PM

மதுரை:
பிஎச்.டி., நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஓராண்டாகியும் நேர்காணல் நடத்தாததால், மதுரை காமராஜ் பல்கலையில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பல்கலை துணைவேந்தர் பணியிடம், 2024 மே முதல் காலியாக உள்ளது. பதிவாளர் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் பேராசிரியர்களே கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். துணைவேந்தர் இல்லாத நிலையில், பல்கலையை வழிநடத்தும் கன்வீனராக கல்லுாரி கல்வி கமிஷனர் சுந்தரவள்ளி கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.
பல்கலையில், 2024 செப்., 22ல் நடந்த பிஎச்.டி., படிப்புகளுக்கான நுழைவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும், தேர்வில் முறைகேடு புகார்கள் காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டாகியும் இதுவரை நேர்காணல் நடத்தவில்லை.
இதற்கிடையே, பிஎச்.டி., நுழைவுத்தேர்வு முறைகேடு உட்பட பல்கலை ஆராய்ச்சி துறையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க, கன்வீனர் கமிட்டி உறுப்பினர் மயில்வாகனன் தலைமையில் சிண்டிகேட் உறுப்பினர்கள் கண்ணன், புஷ்பராஜ் கொண்ட சிறப்பு குழுவை கன்வீனர் சுந்தரவள்ளி நியமித்தார்.
இந்த சிறப்பு குழுவில் இடம் பெற்றவர்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக, முறையாக விசாரணை நடக்கவில்லை என, சர்ச்சை எழுந்துள்ளது.

