UPDATED : செப் 04, 2025 12:00 AM
ADDED : செப் 04, 2025 07:33 PM

புதுடில்லி:
போட்டித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக தேர்வு எழுதுவோரை நியமிப்பதில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மத்திய அரசுப் பணிகளில் சேர விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களால் தேர்வு எழுத முடியாத பட்சத்தில், அவர்களுக்கு உதவியாக தேர்வு எழுத வேறு நபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நபர், மாற்றுத்திறனாளியின் விருப்பத்தின் பேரிலும் தேர்வு செய்யப்படுவர்.
அவ்வாறு தேர்வு எழுதும் நபர்களால் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவோரை நியமிப்பதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வர்களால் முறைகேடுகள் நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் சொல்வதை கேட்காமல், தேர்வர்கள் தாங்களாகவே சொந்தமாக எழுதுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால், தேர்வின் நம்பகத்தன்மை குறைகிறது. ஆகையால், மாற்றுத் திறனாளிகள் சொந்தமாக தேர்வர்களை அழைத்து வரும் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம், தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட தேர்வு அமைப்புகள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தங்களுக்கென மாற்றுத்திறனாளி தேர்வர் குழு ஒன்றை கட்டாயம் உருவாக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே, மாற்றுத் திறனாளிகளால் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். மென்பொருள் சார்ந்த மடிக்கணினிகள், பிரெய்லி உள்ளிட்ட தேர்வு முறைகளை தேர்வர்கள் சுயாதீனமாக எழுதுவது ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அதேசமயம், தேர்வர்களின் தகுதியும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு உதவுவோரின் கல்வித் தகுதி, அந்த பணிக்கான கல்வித் தகுதியை விட குறைவானதாகவே இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.