UPDATED : ஏப் 18, 2024 12:00 AM
ADDED : ஏப் 18, 2024 01:04 PM

உடுமலை:
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து, அறிவிப்பு பலகைகள் அமைக்க, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டப்படி, தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச்சேர்ந்த குழந்தைகள், ஆதரவற்றவர்கள், நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர்.
கல்வி நிறுவனங்கள், கட்டாயம் இக்குழந்தைகளுக்கான இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. புதிய கல்வியாண்டு 2024 - 25க்கான சேர்க்கை பதிவு ஏப்., 22 முதல் மே 20 வரை நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, 25 இட ஒதுக்கீடு சேர்க்கை ஆன்லைன் வாயிலாக, பதிவு செய்யப்படுகிறது.
இதன்படி விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பதிவு செய்ய, இ - சேவை மையங்களையும் பயன்படுத்தலாம்.
கல்வித்துறை அலுவலகங்களில் இலவசமாகவும் பதிவு செய்யப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்க உள்ளதை, பெற்றோருக்கு தெரியபடுத்தும் வகையில், தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.