ரூ.1,000 கோடியில் 'ஸ்டார்ட் அப்' நிதி: ஸ்டார்ட் அப் டி.என்., தலைவர் அழைப்பு
ரூ.1,000 கோடியில் 'ஸ்டார்ட் அப்' நிதி: ஸ்டார்ட் அப் டி.என்., தலைவர் அழைப்பு
UPDATED : அக் 13, 2026 10:22 PM
ADDED : அக் 13, 2026 10:23 PM

சென்னை:
“வளைகுடா நாடுகளை சேர்ந்த முன்னணி தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்களுடன் இணைந்து, 1,000 கோடி ரூபாய் மதிப்பில், 'வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், தமிழக ஸ்டார்ட் அப் நிதி' உருவாக்க வேண்டும்,” என, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., தலைவர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
துபாயில் இம்மாதம், 10ம் தேதி, 'டெரா 100 லீடர்ஷிப்' மாநாடு நடந்தது.
இதில் அவர் பேசியதாவது:
வளைகுடா நாடுகளை சேர்ந்த முன்னணி தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களிடம், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தமிழக ஸ்டார்ட் அப் நிதி ஒன்றை, நாம் இணைந்து உருவாக்க வேண்டும்.
இதன் வாயிலாக, தமிழகத்தில் அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியும். முதலீட்டை தாண்டி, அவர்களின் சர்வதேச தொழில் தொடர்புகள் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, உலக சந்தையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி தரும். இதற்காக, துபாயில் ஸ்டார்ட் அப் டி.என்., சார்பில் தனி அலுவலகம் அமைக்க தயாராக இருக்கிறோம்.
இந்த முயற்சி, வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீட்டு திறனையும், தமிழகத்தின் இளம் தொழில்முனைவோரின் திறமையையும் ஒன்றிணைத்து, உலக அளவில் சாதிக்கும், பல நல்ல நிறுவனங்களை உருவாக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
