மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் ரூ.112 கோடி நிதி விடுவிப்பு
மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் ரூ.112 கோடி நிதி விடுவிப்பு
UPDATED : ஜூன் 25, 2025 12:00 AM
ADDED : ஜூன் 25, 2025 08:29 AM
பெங்களூரு:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வாங்க 111.88 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கோடை விடுமுறை முடிந்து கடந்த மாதம் 29ம் தேதி துவக்க, உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்து பல நாட்கள் ஆகியும், மாணவர்களுக்கு இலவச ஷூ, சாக்ஸ்கள் வழங்கப்படவில்லை.
இதனால், அரசுப்பள்ளி மாணவர்கள் காலில் செருப்பு அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கல்வித்துறை மீது அதிருப்தி அடைந்தனர்.
மாணவர்களின் நிலையை புரிந்து கொண்ட மாநில அரசு, ஷூ, சாக்ஸ் வாங்க வித்யா விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 111.88 கோடி ரூபாய் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நடப்பாண்டில் வித்யா விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 410 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக 111.88 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 40.68 லட்சம் மாணவர்களுக்கு ஒரு ஜோடி ஷூ, இரண்டு ஜோடி சாக்ஸ்கள் வழங்கப்படும்.
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தலா 265 ரூபாய்; 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தலா 295 ரூபாய்; 9 மற்றும் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தலா 325 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.