6,500 தொழில் மையங்களுக்கு ரூ.198 கோடி மானியம் கதர் கிராம தொழில்கள் ஆணைய இயக்குனர் பேச்சு
6,500 தொழில் மையங்களுக்கு ரூ.198 கோடி மானியம் கதர் கிராம தொழில்கள் ஆணைய இயக்குனர் பேச்சு
UPDATED : நவ 22, 2024 12:00 AM
ADDED : நவ 22, 2024 11:36 AM
நாமக்கல்:
தமிழகம் முழுவதும், 6,500 தொழில் மையங்கள் ஏற்படுத்த, 198 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது என சென்னை, கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய மாநில அலுவலக இயக்குனர்(பொ) சுரேஷ் கூறினார்.
மத்திய அரசின் சிறு-குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம், கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம், காதி இந்தியா சார்பில், மாநில அளவிலான தேனீ வளர்ப்பு பயனாளிகள் சந்திப்பு நிகழ்ச்சி, நாமக்கல்லில் நடந்தது.
சென்னை, கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய மாநில அலுவலக இயக்குனர்(பொ) சுரேஷ் தலைமை வகித்து, விழாவை துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்தில், கிராம பகுதிகளின் பொருளாதாரம், வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், மத்திய அரசின் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம், பல்வேறு பயிற்சிகள், கடன் உதவிகளை வழங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள, 74 சர்வோதய சங்கங்கள் மூலம், இதுவரை, 300 கோடி ரூபாய் அளவிற்கு கதர் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, 540 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், இதுவரை, தமிழகம் முழுவதும், 6,500 தொழில் மையங்கள் ஏற்படுத்த, 198 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், 350 தொழில் மையங்களுக்கு, 18 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், சுயதொழில் புரிய ஆர்வமுள்ளவர்கள், மாவட்ட தொழில் மையம், கதர்-கிராம தொழில்கள் ஆணையம், அரசுத்துறை வங்கிகள் ஆகியவற்றை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேனீ இயக்கம் குறித்து, சென்னை, கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின், மாநில அலுவலக துணை இயக்குனர் வசியராஜன், தேனீ வளர்ப்பில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்தால் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும், என்றார். நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை -மலைப் பயிர்கள் துறை உதவி இயக்குனர் புவனேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகன், மாவட்ட தொழில் மைய மேலாளர் சகுந்தலா ஆகியோர் திட்டங்கள் குறித்து விளக்கினர்.
தொடர்ந்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய துணை பேராசிரியர் சங்கர், தேனீ வளர்ப்பு குறித்து விளக்கினார். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருச்செங்கோடு காந்தி ஆசிரம தலைவர் சிதம்பரம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கோவிந்தராஜன், விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.