UPDATED : செப் 14, 2024 12:00 AM
ADDED : செப் 14, 2024 11:34 AM

கடலுார்:
கடலுாரில் நடந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில், 82 மாணவர்களுக்கு 267.34 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக்கடன் உதவிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
கடலுார் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நான் முதல்வன், உயர்வுக்கு படி என்ற மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி.ராஜாராம், கூடுதல் கலெக்டர் சரண்யா, டி.எஸ்.பி., பிரபு முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழக முதல்வரின் நான் முதல்வன் உயர்வுக்குப்படி திட்டம் வாயிலாக மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக எடுக்கப்படும் முன்னோடி முயற்சியாகும். முதற்கட்டமாக சிதம்பரத்தில் கடந்த 9 ம் தேதி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 243 மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதில் இருந்த தடை நீக்கப்பட்டு, உயர்கல்வி தொடர வழிவகை செய்யப்பட்டது.
தொடர்ந்து, கடலுார் மண்டலத்தில் அண்ணா கிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களை சேர்ந்த 2022-23 மற்றும் 20௨௩-24ம் ஆண்டில் 4,784 மாணவர்கள் கண்டறியப்பட்டு, உயர்கல்வி தொடராத வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் உயர்கல்வி கனவை அடைவதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக உள்ளதை கருத்தில் கொண்டு மாபெரும் கல்விக்கடன் முகாம் நடக்கிறது.இந்த கல்விக்கடன் முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கிட வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் இதனை பயன்படுத்தி வருங்கால தமிழகம் கல்வியில் சிறந்த விளங்க அனைவரும் உறுதுணையாய் நிற்போம் என தெரிவித்தார்.
பள்ளி வளாகத்தில் நடந்த கல்விக்கடன் முகாமில் 82 மாணவர்களுக்கு 267.34 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக்கடன் உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் சரண்யா, ஆர்.டி.ஓ.,அபிநயா, சி.இ.ஓ., எல்லப்பன், முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.