UPDATED : ஜூன் 01, 2024 12:00 AM
ADDED : ஜூன் 01, 2024 08:26 AM
வேலுார்:
வேலுார், எழில் நகரிலுள்ள தனியார் பள்ளியில், வேலுார் சாயிநாதபுரத்தை சேர்ந்த செல்வி, 41, என்பவர், 2017ல் டைப்பிஸ்டாக பணியில் சேர்ந்தார்.
கடந்த, 2023 செப்., மாதம் கேஷியராக பதவி உயர்வு பெற்றார். அன்று முதல், கடந்த ஜன., மாதம் வரை, இப்பள்ளி மாணவ - மாணவியர் செலுத்திய கல்வி கட்டணத்தை, குறைத்து காண்பித்து, சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து முறைகேடு செய்தார்.
அதன்படி, கடந்தாண்டு செப்., 26 முதல், கடந்த, ஜன., 3ம் தேதி வரையிலான, 5 மாதங்களில், 26.90 லட்சம் ரூபாயை கையாடல் செய்தது, மார்ச் மாதம் நடந்த தணிக்கையில் தெரிந்தது. அவரிடம் பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியதில், குற்றத்தை ஒப்பு கொண்டார்.
கையாடல் செய்த பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி விடுவதாக தெரிவித்தார். ஆனால் பணத்தை திரும்ப செலுத்தவில்லை. இது குறித்து பள்ளி முதல்வர் ரதிகுமாரி, வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீசார், செல்வியை கைது செய்து விசாரிக்கின்றனர்.