போலி என்.சி.சி., முகாமால் பாதித்த மாணவியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கருணைத்தொகை
போலி என்.சி.சி., முகாமால் பாதித்த மாணவியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கருணைத்தொகை
UPDATED : செப் 21, 2024 12:00 AM
ADDED : செப் 21, 2024 07:22 AM

சென்னை:
போலி என்.சி.சி., முகாம் நடத்தி, பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவியரில் இருவருக்கு தலா, 5 லட்சம் ரூபாயும்; மற்றவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், கருணைத் தொகையாக வழங்க, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போலி என்.சி.சி., முகாம் நடத்தி, மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சூரியபிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை
இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகினர்.
முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கில் பிரதானமாக குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், நீதிமன்றக் காவலில் இருக்கும்போது மரணமடைந்ததால், மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருவதாக, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் மேல் விசாரணை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்து, குழுவில் கூடுதலாக ஒரு எஸ்.பி., மற்றும் இரண்டு டி.எஸ்.பி.,க்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக, அட்வகேட் ஜெனரல் தெரிவித்து உள்ளார்.
பதில் அளிப்பதற்கு ஏதுவாக, ஒருங்கிணைந்த பதில் மனு தாக்கல் செய்யும்படி, மனுதாரரான வழக்கறிஞர் சூரியபிரகாசம் கோரினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியரின் குடும்பத்துக்கு கருணைத்தொகை வழங்கும்படியும் அவர் கோரினார்.
உத்தரவு
கருணைத்தொகை வழங்க, அட்வகேட் ஜெனரலும், கடந்த முறை நடந்த விசாரணையின் போதே ஒப்புக் கொண்டார். கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால இழப்பீட்டுத் தொகையைப் பெற, சில மாணவியரின் குடும்பங்கள் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
எனவே, அதிக அளவில் பாதிக்கப்பட்ட இரு மாணவியரின் குடும்பத்துக்கு தலா, 5 லட்சம் ரூபாய்; பாதிக்கப்பட்ட மற்ற மாணவியரின் குடும்பத்துக்கு, தலா 1 லட்சம் ரூபாய், கருணைத் தொகையாக வழங்க அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.
கிருஷ்ணகிரியில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில், நான்கு வாரங்களில், இந்த தொகையை, டிபாசிட் செய்ய வேண்டும். கருணைத் தொகையை பெற, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உரிய விண்ணப்பத்தை மகளிர் நீதிமன்றத்தில் அளிக்கலாம்.
இதற்கு தேவையான உதவியை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் அளிக்க வேண்டும். வழங்கப்பட்ட கருணைத் தொகையை, பள்ளி நிர்வாகத்திடம் இருந்து அரசு வசூலித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், மாஜிஸ்திரேட் தரப்பில் விசாரணை குறித்த அறிக்கை அளிக்கவும், விசாரணையை, வரும் 30ம் தேதிக்கு, முதல் அமர்வு தள்ளி வைத்தது.