UPDATED : நவ 05, 2026 08:25 PM
ADDED : நவ 05, 2026 08:26 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி தீயணைப்புத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சந்தோசமாக கொண்டாககூடிய பண்டிகை தீபாவளி. இந்நாளில் அசம்பாவிதங்களை தவிர்த்து பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க, கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தீயணைப்புத்துறை சார்பில், விபத்தில்லா பாதுகாப்பான தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலை அலுவலர் கணபதி தலைமை வகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ராக்கெட் போன்ற வான வெடிகளை குடிசைகள் இல்லாத, திறந்த வெளியில் வெடிக்க வேண்டும். எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், உடனே தண்ணீர் ஊற்றில் அணைக்க வேண்டும்; கீழே படுத்து உருள வேண்டும்.
வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்க கூடாது. பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகள், மத்தாப்பு மற்றும் புஸ்வானம் ஆகியவைகளை வெடிக்கும் போது பாதுகாப்புக்கு தண்ணீர் மற்றும் மணல் வாளிகளை அருகில் வைக்க வேண்டும்.
கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்ற பட்டாசு பொருட்கள் வெடித்த பிறகு, தண்ணீரில் நனைத்தோ அல்லது உலர்ந்த மணலில் மூடி வைக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை சேகரித்து மீண்டும் வெடிக்க முயற்சிக்க கூடாது.
சிம்னி விளக்கு, ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்திகளுக்கு அருகே, பட்டாசுகளை வைக்க கூடாது. அதிகமான சப்தம் எழுப்பும் அணுகுண்டு, வெடி பட்டாசுகளை வெடிக்கும் போது குழந்தைகளை அருகில் அனுமதிக்க கூடாது. பட்டாசுகளை, பஸ் ஸ்டாண்ட், காஸ் குடோன், பெட்ரோல் பங்க் அருகாமையில் வெடிக்க கூடாது. இவை உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
