UPDATED : நவ 05, 2024 12:00 AM
ADDED : நவ 05, 2024 09:40 AM

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இந்தியாவில் 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. இதில் உடுமலை அமராவதி அணைக்கு அருகிலுள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியும் ஒன்று. இப்பள்ளி 1962ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த 1975 வரை சைனிக் பள்ளி மெட்ராஸ்(எஸ்.எஸ்.எம்., ) வரை அழைக்கப்பட்டது. அதன் பின், அமராவதி நகர் சைனிக் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் உண்டு உறைவிடப்பள்ளியாக இப்பள்ளி உள்ளது. இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டப்படி செயல்படும் ஆங்கிலவழிப்பள்ளியாக இருப்பினும், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது. பள்ளியில் ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை நடக்கிறது. பாடத்திட்டத்துடன், குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிசுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்தும் கற்றுத்தரப்படுகின்றன.
பள்ளியில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமையின் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெற்று பள்ளியில் சேர்வோருக்கு பொதுப்பள்ளி கல்வி வழங்கப்படுகிறது. கடற்படை, ராணுவம் மற்றும் விமானப்படையில் அதிகாரிகளாக சேர்வதற்கும் மாணவர்களுக்கு இப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.