UPDATED : அக் 02, 2024 12:00 AM
ADDED : அக் 02, 2024 09:21 AM
சிவகங்கை:
காளையார்கோவிலில் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு 20 மாதம் சம்பளம் வழங்காதது குறித்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில் விசாரணை நடந்தது.
காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள சில சிறுபான்மையின பள்ளிகளில் பணிபுரிந்த 4 ஆசிரியர்களுக்கு அப்பள்ளி நிர்வாகம் கடந்த 20 மாதமாக சம்பளம் வழங்காமல் இருந்து வருகிறது. இதை கண்டித்து செப்., 19 அன்று ஆசிரியர் சங்கங்கள் சார்பில் காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். தாசில்தார் முபாரக் உசேன், துணை தாசில்தார் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் தலைமையில் சமரசம் செய்தனர். சிவகங்கை கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்ததால், முற்றுகையை கைவிட்டு சென்றனர்.
* சிவகங்கையில் விசாரணை கூட்டம்: சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், கோட்டாட்சியர் விஜயகுமார் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், காளையார்கோவில் தாசில்தார் முபாரக் உசேன், துணை தாசில்தார் தர்மராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மாரிமுத்து, வட்டார கல்வி அலுவலர்கள் சகாய செல்வன், ஆலிஸ்மேரி, முதன்மை கல்வி அலுவலக அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைத்து தரப்பிலும் விசாரணை செய்த கோட்டாட்சியர், அதற்கான அறிக்கையை கலெக்டரிடம் ஒப்படைத்து, இறுதி முடிவினை அவர் மூலம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.