UPDATED : மே 26, 2024 12:00 AM
ADDED : மே 26, 2024 11:12 AM
கோலார்:
அதிக நன்கொடை, கட்டணம், நோட்டுப் புத்தகங்கள், கல்விக்கு தேவையான ஸ்டேஷனரி பொருட்கள், சீருடைகள், ஷூஸ், சாக்ஸ் விற்பனை செய்யும் ராபர்ட்சன்பேட்டை தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்து, அறிக்கை தருமாறு, வட்டார கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
ராபர்ட்சன்பேட்டையில் தனியார் பள்ளிகளில் அதிக நன்கொடை, கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆண்டுதோறும் கோலார் மாவட்ட கல்வி அதிகாரிக்கு புகார்கள் செல்வது வழக்கம்.
ஆனால் இம்முறை, இவைகளுடன் பள்ளிகளில் நோட்டுப் புத்தகங்கள், கல்விக்கு தேவையான ஸ்டேஷனரி பொருட்கள், சீருடைகள், ஷூஸ், சாக்ஸ் விற்பனையும் நடத்தப்படுவதாக புகார்கள் சென்று உள்ளன.
புகார்கள்
இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள், ஆதாரங்களுடன் வட்டார கல்வி அதிகாரிக்கு புகார்கள் சென்றுள்ளனர். இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக வட்டார கல்வி அதிகாரி கூறியுள்ளாரே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பான விஷயங்கள், சமூக வலைத்தளத்தில் பரவியது.
இவ்விஷயம், கோலார் மாவட்ட கல்வித்துறை அதிகாரியின் கவனத்திற்கும் சென்றது.
இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
தனியார் பள்ளிகளில் கல்விக்கு தேவையான நோட்டு புத்தகம், உபகரணங்கள், சீருடை என எதையும் விற்பனை செய்ய கூடாது என்று கர்நாடக அரசு, ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இவ்விஷயம் தனியார் பள்ளிகளுக்கு நன்றாகவே தெரியும். இதை மீறி, சில பள்ளிகளில் விற்பனை செய்வதாக தெரிய வந்துள்ளது.
சோதனை அறிக்கை
எனவே, கோலார் மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் சோதனை நடத்தி அறிக்கை தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை தனியார் பள்ளி மீது வந்துள்ள புகாரின் பேரில், நானே நேரில் சென்று விசாரிப்பேன். முறைகேடு நடந்திருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தனியார் பள்ளியில் மழலையர் பள்ளி முதல் எஸ்.எஸ்.எல்.சி., வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 2,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒரு மாணவரிடம் மாதந்தோறும் 750 முதல் 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறப்படுகிறது.
பள்ளிகளில் கேள்வி
இது ஒருபுறம் இருக்க, பள்ளியில் நோட்டு புத்தகங்கள், ஸ்டேஷனரிகள் விற்கப்படுகின்றன. இங்கு தான் வாங்க வேண்டும் என மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு மாணவரும் 3,500 முதல் 4,500 ரூபாய் வரை ஒவ்வொரு மாணவரும் செலுத்தி நோட்டு புத்தகங்கள், ஸ்டேஷனரி, பைகளை வாங்க வேண்டும். இதனால் சில பெற்றோர், பள்ளிக்கு சென்று கேள்வி எழுப்பினர்.
பள்ளிக்கு உடந்தையாக வட்டார கல்வி அதிகாரி இருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோரை அலட்சியம் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்வித்துறை விதிமுறைகள் படி இயங்காமல், வர்த்தக நிறுவனமாக மாறியதால் ராபர்ட்சன்பேட்டை ஸ்டேஷனரி கடைகளில் விற்பனை ஆகாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது போன்று ஜவுளிக்கடைகள், காலணிகள் விற்பனையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வட்டார கல்வி அதிகாரி, வரும் திங்கட்கிழமை இப்பள்ளிக்கு 'விசிட்' செய்வதாக தெரிவித்துள்ளார்.