UPDATED : பிப் 17, 2025 12:00 AM
ADDED : பிப் 17, 2025 10:12 PM
வாரணாசி:
உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடந்த, காசி தமிழ் சங்கம் 3.0 நிகழ்ச்சியில், மத்திய செய்தி ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன், புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
தென்மாநில மக்கள், வாழ்நாளில் ஒரு முறையாவது காசிக்கு செல்ல வேண்டும் என ஏங்குவது போல, வடமாநிலத்தினர் ஒரு முறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்று நினைப்பர்.
அனைத்து வகையிலும், தமிழகத்திற்கும், காசிக்கும் ஒரு பிணைப்பு இருந்து வருகிறது. இதனால், காசி தமிழ் சங்கமம் போல, வரும் காலத்தில், தமிழகத்திலும் சங்கமம் நிகழ்ச்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறியதாவது:
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழக மக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. தமிழகத்துக்கும், வடமாநிலங்களுக்கும் உள்ள பிணைப்பை அதிகரிக்க, இந்நிகழ்வு கூடுதலாக வலு சேர்க்கும். இந்த ஆண்டு 25,000 பேர் விண்ணப்பித்தனர்.
இதில், ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த, 1,000 பேரை தேர்வு செய்தோம். கும்பமேளா நிகழ்வுடன், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடப்பது, தமிழக மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. காசி, அயோத்தி உள்ளிட்ட பல புண்ணிய ஸ்தலங்களை பார்வையிட உள்ளனர். அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.