சங்கரா செவிலியர் கல்லுாரி அமைச்சர் நிர்மலா திறப்பு
சங்கரா செவிலியர் கல்லுாரி அமைச்சர் நிர்மலா திறப்பு
UPDATED : செப் 17, 2024 12:00 AM
ADDED : செப் 17, 2024 10:25 AM

காஞ்சிபுரம்:
ஸ்ரீசங்கர கிருபா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில், காஞ்சிபுரம் அடுத்த நல்லுாரில், 53 கோடி ரூபாய் செலவில், 1.06 லட்சம் சதுர அடி பரப்பில் சங்கரா செவிலியர் மகளிர் கல்லுாரி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, செவிலியர் கல்லுாரி கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது:
சங்கரா செவிலியர் கல்லுாரியில், ஆண்டுக்கு 60 பேர் என, மூன்று ஆண்டுகளில், 180 மாணவியர் சேர்ந்துள்ளனர். இதில், 66 சதவீதம் கிராமப்புறங்களைச் சேர்ந்தோர். ஜப்பான் நாட்டிற்கு மோடி செல்லும்போது, உங்கள் நாட்டில் இருந்து செவிலியர்களை அனுப்ப முடியுமா என கேட்கின்றனர்.
செவிலியர் பட்டப்படிப்புகளுக்கு, வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்நாடுகளுக்கு செல்ல விரும்புவோர், அவர்களது மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.
என்.எல்.பி., கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிப்பால், செவிலியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல், வெளிநாடுகளில், செவிலியர்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் யோகா, தியானம் போன்ற நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள்.
நிர்வாக அறங்காவலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகர், டி.சி.எஸ்., முதன்மை செயலர் கிருத்திவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.