நிர்வாக பிரச்னையால் பள்ளி மூடல்: மாணவர்கள் டி.இ.ஓ., ஆபீஸ் முற்றுகை
நிர்வாக பிரச்னையால் பள்ளி மூடல்: மாணவர்கள் டி.இ.ஓ., ஆபீஸ் முற்றுகை
UPDATED : அக் 16, 2026 05:20 PM
ADDED : அக் 16, 2026 05:21 PM
தேனி:
தேனி அருகே பள்ளியை நிர்வகிப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் ஒரு வாரமாக பள்ளி மூடப்பட்டது. பள்ளியை செயல்படுத்த கோரி மாணவர்கள், பெற்றோர் டி.இ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி பழனிசெட்டிபட்டியில் மெட்ரிக் பள்ளி செயல்படுகிறது. இப் பள்ளியை துவங்கி நிர்வகித்து வந்த நிர்வாகத்தினர் வாய்மொழியாக ஒப்பந்த அடிப்படையில் மற்றொரு நிர்வாகத்திற்கு பள்ளியை நடத்த அனுமதி வழங்கினர்.
கடந்த கல்வியாண்டில் பள்ளி நிர்வகிப்பதில் இரு தரப்பு இடையே பிரச்னை எழுந்தது. இரு தரப்பினரும் பள்ளியில் அடிதடி செய்து போலீஸ் வழக்குகள் பதிவாகின.
இந்நிலையில் பள்ளியை துவங்கிய நிர்வாகத்தினரே தொடர்ந்து நடத்த நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. தனியார் பள்ளிகள் இயக்குநரும் அதை ஏற்று உத்தரவு பிறப்பித்தார். ஆனால் கடந்த ஒருவாரமாக பள்ளி மூடப்பட்டது.
இந்நிலையில் நேற்று பள்ளி மாணவர்களுடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் பொம்மையாசாமி ஆகியோர் அல்லிநகரத்தில் உள்ள டி.இ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்களை அலுவலகத்திற்குள் அமர வைத்து வகுப்பு எடுத்தனர்.
பெற்றோர்கள் கூறியதாவது:
இந்த கல்வியாண்டு முழுவதும் தற்போது நிர்வகிக்கும் நிர்வாகமே பள்ளியை நடத்த வேண்டும். இப் பிரச்னையால் மாணவர்கள் படிப்பு கேள்வி குறியாகி உள்ளது, என்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்களுடன் சி.இ.ஓ., முருகன் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர்.
