பள்ளி மானியம் 50 சதவீதம் விடுவிப்பு பராமரிப்பு பணிக்கு ஆயத்தம்
பள்ளி மானியம் 50 சதவீதம் விடுவிப்பு பராமரிப்பு பணிக்கு ஆயத்தம்
UPDATED : ஜூலை 17, 2024 12:00 AM
ADDED : ஜூலை 17, 2024 10:30 AM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான முதல் தவணை பள்ளி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு, ஒவ்வொரு கல்வியாண்டும், தொடர் செலவினத்திற்காக, மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அரசு பள்ளிகளுக்கு மானியம் வழங்க பரிந்துரை செய்கிறது.
அவ்வகையில், பள்ளிகளில், 1 முதல் 30 வரையான மாணவர்கள் இருந்தால், அப்பள்ளி பராமரிப்பு நிதியாக 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இதேபோல, 31 முதல் 100 மாணவர்கள் கொண்ட பள்ளிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய்; 101 முதல் 250 மாணவர்கள் கொண்ட பள்ளிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய்; 251 முதல் ஆயிரம் மாணவர்கள் கொண்ட பள்ளிகளுக்கு, 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, நடப்பு கல்வியாண்டின் மானியத் தொகை, முதல் தவணையாக, 50 சதவீதம் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கும் தொகையில், 50 சதவீதம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த தொகை பள்ளியின் மேலாண்மைக் குழு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிதி, கழிவறைகள் சுத்தம் செய்ய தேவையான பொருட்கள் வாங்குதல், இயங்காத நிலையில் உள்ள உபகரணங்கள் மாற்றுதல், பள்ளியின் மின்கட்டணம், இணையதளம், ஆய்வக உபகரணம், குடிநீர், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் போன்றவற்றிற்கு பயன் படுத்தப்படும்.
இதுதவிர, சுற்றுச்சுவர், வகுப்பறை, கழிவறை உள்ளிட்டவைகளை சமுதாய பங்களிப்புடன் பராமரிக்கவும், பழுது பார்க்கவும், துாய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும் பயன்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.