UPDATED : ஏப் 11, 2025 12:00 AM
ADDED : ஏப் 11, 2025 10:31 PM
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம் தனியார் மெட்ரிக் பள்ளியில், 8ம் வகுப்பு மாணவியை தனிமைப்படுத்தி படிக்கட்டில் அமர்த்தி, தேர்வு எழுத வைத்த வீடியோ வைரல் ஆனது. இதையடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் உள்ள சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், கே.ஜி., வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 650 மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில், 8ம் வகுப்பு மாணவியை தனிமைப்படுத்தி படிக்கட்டில் அமர்த்தி, 7 மற்றும் 9ம் தேதிகளில் முழுஆண்டு தேர்வை எழுத வைத்துள்ளனர். இதையறிந்து, அப்பெண்ணின் அம்மா பள்ளிக்கு சென்று, மொபைல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
அந்த மாணவி, கடந்த, 5ம் தேதி வயதுக்கு வந்ததால், பள்ளியில் தனிமைப்படுத்தி தேர்வு எழுத வைத்ததாகவும், அருந்ததியர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு நடந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இதையடுத்து, பள்ளிக்கு வந்த பொள்ளாச்சி ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங், நெகமம் போலீசார் மற்றும் கோவை மாவட்ட பள்ளி கல்வி துறை உதவி இயக்குனர் வடிவேல், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி) கோமதி ஆகியோர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.
ஏ.எஸ்.பி., செய்தியாளர்களிடம் கூறுகையில், ள்ளி மற்றும் மாணவி என இரு தரப்பினரிடையே விசாரணை செய்யப்பட்டது. தனியாக அமர்ந்து தேர்வு எழுத பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் கேட்டனர். பள்ளி முதல்வர் அனுமதி பெற்ற பின், மாணவி தனியாக அமர்ந்து தேர்வு எழுதியுள்ளார். இதுபற்றி விசாரித்து, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்படும், என்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் நிருபர்களிடம் கூறுகையில், இப்பள்ளியில் மாணவி தனியாக படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுதியதற்கு முதற்கட்டமாக பள்ளி நிர்வாகம் முதல்வரை தற்காலிக பணி இடை நீக்கம் செய்துள்ளது. அடுத்த கட்ட விசாரணை நடத்தப்பட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
பள்ளி நிர்வாக அறங்காவலர் கல்பனாதேவி கூறியதாவது:
பள்ளியில், அந்த மாணவி தனியாக தேர்வு எழுத வேண்டும் என, முதல்வர் ஆனந்தியிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். இதை தொடர்ந்து, வினாத்தாளை மாணவி வசம் ஒப்படைத்து, மாணவிக்கு உகந்த இடத்தில் அமர்ந்து தேர்வு எழுதும் படி அறிவுறுத்தப்பட்டது. மாணவியின் விருப்பத்தின் பேரில், படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுதினார்.
மேலும், இங்கு அமர்ந்து தேர்வு எழுத சிரமம் ஏற்பட்டிருந்தால், அந்த மாணவியோ அல்லது பெற்றோரோ பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டிருந்தால், தேர்வு எழுத மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். ஆனால், படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுதுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.
இது குறித்து விசாரணை நடக்கும் நிலையில், முதல்வர் ஆனந்தியை, பள்ளி தாளாளர் தங்கபாண்டியன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இவ்வாறு, கூறினார்.
அமைச்சர் பதிவு
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், தனது எக்ஸ் பதிவில் தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். குழந்தை மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை, நாங்கள் இருக்கிறோம், இருப்போம் என பதிவிட்டுள்ளார்.

