பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி; ஆசிரியர்கள் மீது வழக்கு
பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி; ஆசிரியர்கள் மீது வழக்கு
UPDATED : நவ 09, 2024 12:00 AM
ADDED : நவ 09, 2024 11:12 AM
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகராட்சி பள்ளி மாணவன் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீசார் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 16 வயது மாணவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் சில நாட்கள் பள்ளிக்கு வராததால் வகுப்பு ஆசிரியர் தங்கப்பன் பெற்றோரை அழைத்து வர அறிவுறுத்தியதாகவும், பெற்றோரை அழைத்து வராததால் கடந்த 6ம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவரை ஆசிரியர் தங்கப்பன் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவரை மீண்டும் ஆசிரியர் தங்கப்பன், தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன் ஆகிய இருவரும் அடித்துள்ளனர். மனமடைந்த மாணவர், கடையில் எலி பிஸ்கட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார். சக மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் மாணவன் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். மருத்துவமனைக்கு மாணவனை பார்க்க வந்த தலைமை ஆசிரியரை மாணவனின் தாயார் தாக்கினார். இந்நிலையில் போலீசார், வகுப்பு ஆசிரியர் சீர்காழி திட்டையைச் சேர்ந்த தங்கப்பன், தலைமை ஆசிரியர் மயிலாடுதுறை துர்கா நகரை சேர்ந்த தாமரைச்செல்வன் ஆகிய இருவரும் மாணவனை திட்டி, கையால் அடித்ததாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.