UPDATED : ஏப் 02, 2024 12:00 AM
ADDED : ஏப் 02, 2024 07:32 PM
கரூர்:
பெரம்பலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., அமைச்சர் நேரு மகன் அருண் நேரு பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில், பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய புகார் குறித்து, தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
லோக்சபா தேர்தலில், பேரணி, முழக்கம்
எழுப்புதல், துண்டு பிரசுரம் வினியோகம், தேர்தல் தொடர்பான பிற செயல்பாடுகளில், சிறார் மற்றும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மீறினால், கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலுார் லோக்சபா தொகுதியில், நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு, தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக, கரூர் மாவட்டம், குளித்தலை சட்டசபை தொகுதியில், கடந்த, 26ல் பிரசாரம் மேற்கொண்டார். அதில், கம்பளியாம்பட்டி, மத்தகிரி ஆகிய ஊர்களில், பள்ளி சீருடையில் மாணவ, மாணவியர், பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து புகார் எழுந்து, 5 நாட்களாகியும் தேர்தல் அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர்கள் செயல்படுகின்றனரா என, புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, குளித்தலை தொகுதி தேர்தல் பறக்கு படை அலுவலர் சரவணன் கூறுகையில், இதுவரை நாங்கள் புகார் ஏதும் கொடுக்கவில்லை என்றார்.