வேளாண் அறிவியல் நிலையத்திற்கு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
வேளாண் அறிவியல் நிலையத்திற்கு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
UPDATED : நவ 21, 2026 04:47 AM
ADDED : நவ 21, 2026 04:48 AM
புதுச்சேரி:
வேளாண் அறிவியல் நிலையத்திற்கு கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.
மணலிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 55 மாணவர்கள், 10 ஆசிரியர்களுடன் இணைந்து குருமாம்பேட்டில் உள்ள காமராசர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு கல்விச் சுற்றுலா மற்றும் களப்பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன மற்றும் பாரம்பரிய இயற்கை விவசாய முறைகள், மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் மற்றும் அரிய வகை மூலிகைத் தாவரப் பண்ணை, கோழி வளர்ப்பு ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் மண் வளத்தைக் காப்பதன் முக்கியத்துவம் குறித்து வேளாண் வல்லுநர்கள் மாணவர்களுக்கு விளக்கினர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'எங்கள் பள்ளியில் செயல்பட்டு வரும் ஈகோ கிளப் சார்பில், மாணவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்தி வருகிறோம். ஏட்டுக் கல்வியைத் தாண்டி, இயற்கையை நேரில் உணர இந்தக் களப்பயணம் மாணவர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது' என்றனர்.
