பள்ளி வாகனங்கள் ஆய்வு; குறைபாடுகளை சரிசெய்ய அறிவுரை
பள்ளி வாகனங்கள் ஆய்வு; குறைபாடுகளை சரிசெய்ய அறிவுரை
UPDATED : மே 12, 2025 12:00 AM
ADDED : மே 12, 2025 09:22 AM
உடுமலை:
உடுமலையில், தனியார் பள்ளிகளின் வாகனங்களை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, குறைபாடுள்ள வாகனங்களை சரிசெய்ய அறிவுறுத்தினர்.
தமிழக அரசு உத்தரவுப்படி, ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்தில் பள்ளி வாகனங்கள், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என, ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி, உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட, 30 பள்ளிகளை சேர்ந்த, 148 பள்ளி வாகனங்கள் நேற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
உடுமலை வருவாய் கோட்டாச்சியர் குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல், தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வாகனங்களில் உரிய பாதுகாப்பு உள்ளதா, ஏறி, இறங்கும் படிக்கட்டு உயரம் சரியாக உள்ளதா, ஓட்டுநர், நடத்துநர் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனரா, ஆபத்து அவசர கால வழிகள் சரியாக உள்ளதா, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி, கண்காணிப்பு கேமரா ஆகியவைகள் உள்ளதா, புகைச்சான்று, பசுமை சான்று உள்ளிட்ட சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது, சிறிய குறைபாடுகள் கண்டறியப்பட்ட 10 வாகனங்களை, சரி செய்து 7 தினங்களுக்குள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. தீயணைப்புத்துறை சார்பாக வாகன ஓட்டுநர்களுக்கு தீயணைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

