UPDATED : மே 29, 2024 12:00 AM
ADDED : மே 29, 2024 08:13 AM

திருப்பூர்:
திருப்பூரில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், நடப்பாண்டு தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறையினர் மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.
நடந்து முடிந்த, பிளஸ் 2 பொது தேர்வில், மாநில அளவில் முதல் ரேங்க் பெற்ற அசத்திய திருப்பூர் மாவட்டம், 10ம் வகுப்பு பொது தேர்வில், 21வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 11ம் வகுப்பில், மாநில அளவில், 3ம் ரேங்க் பெற்றது.
இருப்பினும், 10ம் வகுப்பு பொது தேர்வு சதவீதம், மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை சங்கடத்தில் ஆழ்த்தியது.வரும் கல்வியாண்டில், இந்த சரிவில் இருந்து மீள, மாவட்ட நிர்வாகமும் கல்வித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளனர்.
மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சி கமிஷனர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என, ஒவ்வொருவரும் தனித்தனியாக பள்ளி தலைமையாசிரியர்களிடம் கலந்தாய்வு நடத்தினர்.
தேர்ச்சி விகிதம் குறைய காரணம் என்ன; எந்தெந்த பாடத்தில் மாணவர்கள் அதிகம் தோல்வியடைந்துள்ளனர் என்பது போன்ற விவரங்களை கேட்டறிந்து, குறைகளை நிறைவு செய்ய அறிவுரை வழங்கி வருகின்றனர். நேற்று மாலை கூட, கல்வித்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடத்தப்பட்டது.
தனியார் பள்ளிகள் வேகம்
நடந்து முடிந்த, 10ம் வகுப்பு பொது தேர்வில், அரசு, மாநகராட்சி பள்ளிகள் மட்டுமின்றி, தொடர்ச்சியாக, 100 சதவீத தேர்ச்சியை வழங்கி வந்த பல தனியார் பள்ளிகள் கூட, 100 சதவீத தேர்ச்சியை தவறவிட்டன. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை 100 சதவீத தேர்ச்சி என்பது, அவர்களுக்கான கவுரவமாகவும் கருதப்படுகிறது. இதனால், தேர்ச்சியை தவறவிட்ட பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அடுத்த மாதம், 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, அரசு அறிவித்துள்ள நிலையில், நாட்களை வீணடிக்க விரும்பாத பல தனியார் பள்ளிகள், நேற்று முதலே இயங்கத்துவங்கின.
பொது தேர்வெழுதும், 10, 11 மற்றும், 12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகளை துவக்கி விட்டனர். இந்த கல்வியாண்டில், அரசு, தனியார் பள்ளிகள், கூடுதல் கவனம் செலுத்த தயாராகிவிட்டன.