UPDATED : மே 31, 2025 12:00 AM
ADDED : மே 31, 2025 10:38 AM
கோவை:
பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக, 120 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும், 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. விடுமுறை நீட்டிக்கப்படும் என, பலரும் எதிர்பார்த்த நிலையில், திட்டமிட்டபடி, ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள், சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் கோவை திரும்ப திட்டமிட்டுள்ளனர். தற்போதிருந்தே பஸ்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்றும், நாளையும் அதிக பயணிகள் வெளியூர்களில் இருந்து கோவை திரும்புவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, கோவையில் இருந்து சேலத்துக்கு, 20, மதுரைக்கு, 50, தேனிக்கு, 25, திருச்சிக்கு, 25 என, மொத்தம், 120 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுதவிர, ஊட்டியில் இருந்து, 25 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும், பஸ்களுடன் கூடுதலாக இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக, அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.