லஞ்சத்தை தவிர்த்தால் பள்ளிகள் பலன்பெறும்; ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கு ஆதரவு
லஞ்சத்தை தவிர்த்தால் பள்ளிகள் பலன்பெறும்; ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கு ஆதரவு
UPDATED : ஜூன் 28, 2026 11:08 AM
ADDED : ஜூன் 28, 2026 11:09 AM
சென்னை:
தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் வாங்குவதை தவிர்த்தால், தரமான கல்வியை வழங்க முடியும் என்று தனியார் பள்ளியின் நிறுவனர் வினிதா கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.
இலவச பள்ளி அமைப்பதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்ததற்கு, திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்டதாக 'ஜோஹோ' நிறுவன தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு குற்றம்சாட்டியிருந்தார். அவரது இந்தக் குற்றச்சாட்டை நிருபிக்கும் விதமாக, தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமாரும் பேட்டி அளித்திருந்தார்.
பள்ளிக்கு அனுமதி பெறவும், பள்ளி உரிமத்தை புதுப்பிக்கவும், தடையில்லா சான்று வாங்கவும் ஒவ்வொரு தொகையை தி.மு.க.,வினர் வசூலித்து வந்ததாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தாராபுரத்தில் செயல்பட்டு வரும் அபிஸ்ரீ அகாடமி பள்ளி நிறுவனர் வினிதா கோவிந்தசாமி என்பவரும், பள்ளிகளிடம் லஞ்சம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள பதிவில், அவர் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியின் போது நாங்கள் தொடர்ந்து பணம் கொடுக்க வேண்டும் என்றே சோர்வடைந்து விட்டோம். தி.மு.க., ஆட்சியில் பள்ளியை மூடி விடலாம் என்ற எண்ணம் பலமுறை எங்களுக்கு வந்தது. பேராசைக்கும் கூட ஒரு எல்லையிருக்கும். ஆனால், தி.மு.க.,வினர் எங்களிடம் இருந்து எதிர்பார்த்த பணத்திற்கு எல்லையே இல்லை. பள்ளி தொடர்பான எந்த விஷயத்திற்கு சென்றாலும் பணத்தை எதிர்பார்த்தனர்.
2022ல் சென்னையில் நடைபெற்ற உலக கோப்பை செஸ் போட்டி விளம்பரத்திற்கு எங்களின் பள்ளி வாகனத்தை வற்புறுத்தி பெற்றுக் கொண்டனர். ஸ்டாலினின் போட்டோவை ஒட்டி எங்களின் பள்ளி வாகனத்தில் விளம்பரம் செய்து கொண்டனர். உலகக்கோப்பை செஸ் தொடர் முடிந்த பிறகும், பள்ளி வாகனத்தில் இருந்த விளம்பரத்தை அகற்றவில்லை. விளம்பரத்தை அகற்றி தரக் கேட்ட போது, நீங்களே செலவு செய்து அகற்றிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.
குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும். ஊழல் மற்றும் லஞ்சத்தை தவிர்த்தால் பல பள்ளிகள் நிச்சயம் பலனடையும்.
ஏனெனில், இதனால் ஏற்படும் நிதிச்சுமை குறையும் மற்றும் அந்த நிதியைக் கொண்டு கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உருவாகும். பண விஷயத்தில் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு தற்போது நிம்மதியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
