விவசாயம் முதல் விண்வெளி வரை வளர விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆசை
விவசாயம் முதல் விண்வெளி வரை வளர விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆசை
UPDATED : பிப் 20, 2026 01:10 PM
ADDED : பிப் 20, 2026 01:12 PM

கோவை:
தனியார் பங்களிப்புடன் கோவையில் சாலை சந்திப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. அவற்றில் சிலைகள் நிறுவப்படுகின்றன.
கோர்ட் எதிரே உள்ள சாலை தீவு திடலில் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் மனிதன் சிலை நிறுவப்பட்டது. காந்திபுரம் சந்திப்பில் சந்திராயன், பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரி உருவம் நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்றார். 'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, திறந்து வைத்தார்.
மயில்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:
இஸ்ரோவில் சேர காந்திபுரம் வழியாகவே பெங்களூரு சென்றேன். இன்று அதே சந்திப்பில் நிலவில் இறக்கிய சந்திராயன் மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.
பொது இடத்தில் சந்திராயன் மாடல் வைக்கப்பட்டது, இதுவே முதல்முறை. இதை பார்க்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு உத்வேகம் ஏற்படும்.
அரசு பள்ளி மாணவர்களை விண்வெளி துறையில் ஊக்கப்படுத்த பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளோம்.
மாணவர்களும் ஆண்டுதோறும் புதிதாக எதையாவது படைக்கின்றனர். 20 - 30 கி.மீ., செல்லும் ராக்கெட் செய்து, மகாபலிபுரம் கடற்கரையில் சோதித்து பார்த்தனர்.
விவசாயம் முதல் விண்வெளி வரை இந்தியா வளர வேண்டிய அவசியம் இருக்கிறது. விண்வெளித் துறையில் அடுத்து கவனிக்க வேண்டிய இடம் குலசேகரபட்டினம். உபகரணங்களில் துவங்கி ராக்கெட் வரை தயாரிக்கும் நிலையை நோக்கி பயணிக்கிறோம்.

