உதயநிதி ஆட்சிக்கு வரும்போது மாணவிகளுக்கு ஸ்கூட்டர்; அமைச்சர் பொன்முடி பேச்சு
உதயநிதி ஆட்சிக்கு வரும்போது மாணவிகளுக்கு ஸ்கூட்டர்; அமைச்சர் பொன்முடி பேச்சு
UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 03:29 PM
திருவெண்ணெய்நல்லுார்:
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் பொன்முடி மணக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஏமப்பூர் மாதிரி பள்ளி, திருவெண்ணெய்நல்லுார் காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளி, சித்தலிங்கமடம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளி களைச் சேர்ந்த 208 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி பேசியதாவது:
தமிழக முதல்வர் மாணவிகள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் புதுமைப்பெண் திட்டத்தினை செயல் படுத்தி மாதம் தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கி வருகிறார்.
இத்திட்டத்தின் மூலம் அதிக அளவில் மாணவிகள் உயர் கல்வி பயிலும் நிலை உருவாகியுள்ளது. இன்றைய வளரும் இளம் தலைமுறையிடம் தமிழ் பற்று வளர்த்திடும் வகையில் பள்ளிகளில் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளை நடத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
நடந்து போய் படித்த காலம் போய் இன்று அனைவருக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். காலம் மாறி சைக்கிள் வேண்டாம் ஸ்கூட்டர் கொடுங்கள் என மாணவிகள் கேட்பார்கள். இதுதான் காலத்தின் வளர்ச்சி.
அது வருமா என்றால் நிச்சயமாக வரும். உதயநிதி தலைமையில் ஆட்சி வரும் போது நிச்சயமாக உங்களுக்கு ஸ்கூட்டர் வழங்குகிற காலம் வரும் என்றார்.