சிற்பிகள் பெயர் பொறித்த குன்றுகள் பாதுகாப்பு சின்னங்களாக அறிவிப்பு
சிற்பிகள் பெயர் பொறித்த குன்றுகள் பாதுகாப்பு சின்னங்களாக அறிவிப்பு
UPDATED : ஏப் 09, 2024 12:00 AM
ADDED : ஏப் 09, 2024 11:19 AM

மாமல்லபுரம்:
மாமல்லபுரம், பூஞ்சேரியில் அமைந்துள்ள பல்லவர் கால சிற்பக் கலைஞர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட தரைமட்ட குன்றுகளை, பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்களாக, தொல்லியல் துறை அறிவித்து உள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள பாறை குன்றுகளில், கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு பல்லவ மன்னர்கள், சிற்பக் கலைகள் படைத்தனர். சுற்றுலா பயணியரை, கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்டவை கவர்கின்றன.
அக்கால சிற்பக் கலைஞர்கள், மன்னர்களின் ரசனைக்கேற்ப, பாறை குன்றுகளில் சிற்பங்களை வடித்தனர். அக்கலைஞர்களில், கேவாத பெருந்தச்சன், திருவொற்றியூர் ரவி பெருந்தச்சன், பையமிழைப்பான், அவனி பாஜனன், குணமல்லன் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவர்களின் பெயர்கள், சிற்பங்களில் பொறிக்கப்படவில்லை. மாமல்லபுரத்திற்கு வெளியே, பூஞ்சேரியில் உள்ள தரைமட்ட குன்றில், அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த வரி வடிவத்தில், சிற்பிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இக்குன்றை, நொண்டி வீரப்பன் தொட்டி என அழைத்துள்ளனர். கலைஞர்களை சிறப்பிக்கவும், அவர்கள் பற்றி வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளவுமே, அவர்களின் பெயர்களை, குன்றுகளில் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இக்குன்றுகளின் சிறப்பு, முக்கியத்துவம் கருதி பாதுகாக்க வேண்டிய நிலையில், தொல்லியல் துறையிடம் உரிய ஆவண பதிவுகள் இல்லாததால், பாதுகாக்க முயலாமல் சீரழிந்தது.
இது குறித்து, நம் நாளிதழில், ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொல்லியல் துறையினர், குன்றுகளை சூழ்ந்த முட்புதரை அகற்றி, பராமரித்து வருகின்றனர். மேலும், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என, அக்குன்றுகளை அறிவித்துள்ளனர்.
அதனால், இனி அக்குன்றுகளை அழிப்பவர், சிதைப்பவர் மீது, தொல்லியல் துறையின் 1958ம் ஆண்டு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, தகவல் பலகை அமைத்துள்ளனர்.
இது குறித்து, தொல்லியல் துறையினர் கூறியதாவது:
மாமல்லபுரம் சிற்பங்களை செதுக்கிய சிற்பிகள் பெயர்கள் உள்ள குன்றை பாதுகாப்பது அவசியம். பொதுமக்களிடம் அதுபற்றி விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். தற்போது, அவற்றை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்துள்ளோம். குன்றுக்கு கம்பி தடுப்பு அமைத்து, பயணியர் அறியவும் வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.