UPDATED : ஜன 02, 2025 12:00 AM
ADDED : ஜன 02, 2025 12:51 PM

தமிழக விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டிற்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பயிற்சி, ஊக்கத்தொகைகள், போட்டிகள், முகாம்கள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பிரதான உதவித்தொகை திட்டங்கள்:
*தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் - எலைட்
ஒலிம்பிக், உலக ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளில் பங்கு பெற்று முதல் 8 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு தலா 30 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
*மிஷன் இண்டர்நேஷனல் மெடல்ஸ் ஸ்கீம்- எம்.எம்.ஐ.எஸ்.,
அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றிருக்க வேண்டும். ஒலிம்பிக் / ஆசிய விளையாட்டு போட்டி / காமன்வெல்த் போட்டியில் தனி நபர் பிரிவில் பங்கேற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உட்பட அதிகபட்சமாக 75 வீரர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு நபர் ஒருவருக்கு 12 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
*வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் - சி.டி.எஸ்.,
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு ஆண்டுக்கு நபர் ஒருவருக்கு தலா 2 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. தற்போது 102 பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
அரசால் நியமிக்கப்பட்ட உயர் மட்ட குழு தகுதியானவர்களை தேர்வு செய்கின்றனர். விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒவ்வொரு மாதமும் தங்களது பயிற்சி விபரங்கள், போட்டிகளில் பங்கேற்ற விபரங்கள், காயம் மற்றும் சிகிச்சை விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை தங்களுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வலைதள பக்கத்தில் பதிவேற்ற வேண்டும்.
இவை தவிர, பல்வேறு விருதுகள், போட்டிகள் மற்றும் ஊக்கத்தொகை திட்டங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் செயல்படுத்தப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டின் www.sdat.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.