கிராமப்புற கல்வி நிறுவனங்களை பாதிக்காமல் சட்டம் சுயநிதி கல்லுாரிகள் சங்கம் வலியுறுத்தல்
கிராமப்புற கல்வி நிறுவனங்களை பாதிக்காமல் சட்டம் சுயநிதி கல்லுாரிகள் சங்கம் வலியுறுத்தல்
UPDATED : நவ 01, 2025 07:06 AM
ADDED : நவ 01, 2025 07:08 AM

கோவை:
'கிராமப்புற கல்வி நிறுவனங்களை பாதிக்காத வகையில், பல்கலை சட்ட திருத்தத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு சுயநிதி, கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் 21வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், சமீபத்தில் நடந்தது. தமிழக அரசு மாநில பல்கலை சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்தும் என்பதால், அதில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சட்ட திருத்தம், தற்போதுள்ள தனியார், உதவி பெறும் கல்லுாரிகளை பிரவுன் பீல்ட் பல்கலைகளாக மாற்ற அனுமதிக்கிறது. கல்லுாரிகளுக்கு அருகில் உள்ள நிலத்தின் குறைந்தபட்ச அளவை, நகராட்சிகளில் 25, பேரூராட்சிகளில் 35, கிராமங்களில் 50 ஏக்கர் என குறைத்துள்ளது. தகுதியான நிறுவனங்களை ஆதரிப்பது, பிற மாநிலங்களின் விதிமுறைகளுடன் இணங்குவதற்கும், அரசின் நோக்கத்தை சங்கம் வரவேற்கிறது. இத்திருத்தத்தால், அறிமுகப்படுத்தப்பட்ட நிலப்பரப்பு வேறுபாடு, தமிழகத்தின் உயர்கல்வி கட்டமைப்பில், சமத்துவமின்மை, முரண்பாடுகளை உருவாக்கும்.
ஆரம்பத்தில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், 1956 பல்கலை மானியக்குழு சட்டம் மற்றும் தொடர்புடைய மாநில சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பு ஏழாவது அட்டவணை, பட்டியல் 1 பிரிவு 66, பட்டியல் 3 பிரிவு 25 ஆகியவற்றின் கீழ் குறிப்பிட்டபடி உருவாக்கப்பட்டவை. நகர்ப்புறத்தில் தொடர்ச்சியான நிலப்பரப்புகளை உருவாக்க முடியாது என்பதற்காக, நிலத்தேவையை மாற்றுவது பொருத்தமற்றது.
கிராமப்புற கல்வி நிறுவனங்களுக்கு அதிக நிலத்தேவை என்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும், புவியியல் இருப்பிடத்தை கணக்கிடாமல், ஒரே மாதிரியான நிலத்தேவையை வகுக்க வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய கல்வி நிறுவனங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட நிலப்பரப்பின் அடிப்படையில், பல்கலை அந்தஸ்து வழங்க வேண்டும். பிரவுன் பீல்ட் அல்லது தனியார் பல்கலைகளாக மாற்றுவதற்கான தகுதியை குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் இயங்கி வரும் மற்றும் 'நாக்' வழங்கிய 'ஏ' தரச்சான்றிதழ் பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.
கிராமப்புற கல்வி நிறுவனங்களுக்கு சமமான அணுகுமுறை வழங்கப்பட வேண்டும். நில விதிமுறைகளில் ஏற்படும் வேறுபாடுகளால் இத்தகைய கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படாமல், உரிய சமத்துவ வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
சங்கத்தின் கருத்துக்கள், பரிந்துரைகளை முன்வைக்க, கலந்துரையாடல் கூட்டத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

