அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு
UPDATED : ஆக 28, 2025 12:00 AM
ADDED : ஆக 28, 2025 09:40 AM
நியூயார்க்:
அமெரிக்காவில் மின்னோபோலீஸ் கத்தோலிக்க பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலம் மின்னோபோலீஸ் நகரில் கத்தோலிக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று முதல் நாள் வகுப்புகள் தொடங்கின. மாணவர்களும் அவர்களது பெற்றோரும் வந்திருந்தனர். அப்போது திடீரென்று மர்ம நபர் ஒருவர் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் இருவர் உயிரிழந்து விட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த சில வினாடிகளில் போலீசார் வந்தனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்
அவர் யார், பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புடையவரா என்பது பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரார்த்தனை செய்கிறேன்!
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, கவர்னர் டிம் வால்ஸ் கூறியதாவது:
கத்தோலிக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில ரோந்துப் படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர். இந்த கொடூரமான வன்முறைச் செயலால் பாதிக்கப்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.