UPDATED : ஆக 23, 2025 12:00 AM
ADDED : ஆக 23, 2025 08:46 AM

சென்னை:
தமிழகத்தில் இன்று துவங்கும் சுருக்கெழுத்து தேர்வுகள், உரிய இடைவெளியின்றி தொடர்ந்து, ஐந்து மணி நேரம் நடத்தப்படுவதற்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் சுருக்கெழுத்து தேர்வுகள் இன்றும், நாளையும் நடக்கின்றன. இதற்கான அட்டவணையை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
பிரிவுகள் தொடர்ச்சியாக, ஐந்து மணி நேரம் வரை, இடைவெளியின்றி தேர்வு எழுதும்படி உள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில், 30,000 பேர் சுருக்கெழுத்து தேர்வு எழுத உள்ளனர்.
தமிழ், ஆங்கிலம் என, இரு மொழிகளிலும், சீனியர், ஜூனியர் மற்றும் இடைநிலை உள்ளிட்ட பிரிவுகளில், தேர்வுகள் நடக்கின்றன.
தமிழ் சுருக்கெழுத்து சீனியர் பிரிவு தேர்வானது, காலை 8:30 மணிக்கு துவங்குகிறது. இதில் ஐந்து வினாத்தாள்கள் எழுத வேண்டும். இரண்டாம் தாளுக்கு, இரண்டு நிமிடம் இடைவெளி; மூன்றாம் தாளுக்கு, 19 நிமிடம்; நான்காம் தாளுக்கு, 15 நிமிடம்; ஐந்தாம் தாளுக்கு 18 நிமிடம் இடைவெளி அளிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், ஜூனியர் சுருக்கெழுத்து தேர்வு, மதியம் 2:30 மணிக்கு துவங்குகிறது. இரண்டாம் தாளுக்கு, 15 நிமிடம், மூன்றாம் தாளுக்கு, 18 நிமிடம் இடைவெளி அளிக்கப்பட்டு உள்ளது.
நாளை நடக்க உள்ள தேர்வுகளும் இதே அடிப்படையில், 18 நிமிடம் மற்றும் 20 நிமிடம் இடைவெளி தான் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஒரு மணி நேரம் கூட இடைவெளி அளிக்காமல், மாணவர்கள் எவ்வாறு தேர்வு எழுத முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கண்டனம்
இதுகுறித்து, தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத் தொடர்பு அலுவலர் ர விச்சந்திரன் கூறுகையில், ''தமிழகத்தில் எந்த ஒரு தேர்வும் தொடர்ந்து, ஐந்து மணி நேரம் நடப்பதில்லை. அப்படி இருக்கும்போது, சுருக்கெழுத்து தேர்வுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கடுமை? மாணவர்கள் தண்ணீர் அருந்த கூட நேரம் ஒதுக்காமல், தேர்வு அட்டவணை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குஉரியது,'' என்றார்.