'அப்பா' பட்டத்தை கொண்டாடும் முதல்வர் மாணவியர் பாதுகாப்பை கை கழுவலாமா? பா.ஜ., நாகேந்திரன் கேள்வி
'அப்பா' பட்டத்தை கொண்டாடும் முதல்வர் மாணவியர் பாதுகாப்பை கை கழுவலாமா? பா.ஜ., நாகேந்திரன் கேள்வி
UPDATED : ஆக 28, 2025 12:00 AM
ADDED : ஆக 28, 2025 08:42 AM
சென்னை :
'அப்பா என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின், மாணவியரின் பாதுகாப்பை கை கழுவலாமா?' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
கோவை, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள், போதையில் வருவதோடு, தவறான முறையில் சீண்டி, பாலியல் ரீதியாக அத்து மீறுவதாக, மாணவியர் குற்றஞ்சாட்டி, வெளியிட்ட வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளியில் புகார் அளித்தால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததுடன், 'செய்முறை தேர்வு மதிப்பெண்ணையும் குறைத்து விடுவர்,' என தெரிவிக்கின்றனர்.
மாணவியரின் வீடியோ வாயிலாக, அரசு பள்ளிகளில் பாலியல் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பது தெளிவாகிறது.
வேலியே பயிரை மேய்ந்தது போல, அரசு பள்ளி ஆசிரியர்களே, மாணவியரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம், தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? மாணவியர் தைரியமாக புகார் அளிக்க கூட, தி.மு.க., ஆட்சியில் வழி இல்லையா?
அரசு பள்ளியில் தரமான கல்வி இருக்காது என்ற தவறான எண்ணம் பொதுப்புத்தியில் இருக்கும் நிலையில், மாணவியருக்கு பாதுகாப்பும் இருக்காது என்று கருத்து உருவாகி விடாதா?
அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவியரின் பாதுகாப்பை கைகழுவுவது தான் பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலமா? 'அப்பா' என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின், மாணவியர் பாதுகாப்பை கைகழுவாமல், உரிய நடவடிக்கை எடுப்பாரா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

