UPDATED : ஏப் 03, 2024 12:00 AM
ADDED : ஏப் 03, 2024 09:33 AM
மதுரை:
மதுரை அரசு மருத்துவமனை 14 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட கட்டடங்களுடன் செயல்பட்டாலும் சித்த மருத்துவப்பிரிவுக்கு மட்டும் போதிய இடம் ஒதுக்கவில்லை.
அலோபதியைத் தாண்டி சித்த மருத்துவப்பிரிவை விரும்பும் நோயாளிகள் தினமும் 120 பேர் வரை இங்கு புறநோயாளியாக சிகிச்சைக்கு வருகின்றனர். காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி என நான்கு மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது. மருந்துகள் வைப்பதற்கும் டாக்டர் நோயாளியிடம் பேசுவதற்கும் என இடநெருக்கடியான சிறு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திருமங்கலத்தில் சித்த மருத்துவக் கல்லுாரி செயல்படுவதால் அங்குள்ள அரசு மருத்துவமனை நோயாளிகள் பயன்பெறுகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் அலோபதி சிகிச்சைக்கான கட்டடங்கள் மட்டுமே ரூ.ஆயிரம் கோடியைத் தாண்டும். ஆனால் சித்தாவுக்கு மட்டும் தனியாக ஒரு கட்டடம் கூட இல்லை.
தனியாக கட்டடம் அமைந்தால் சித்த மருத்துவத்தின் எண்ணெய்க் குளியல், வர்மம், மூலிகை சிகிச்சை உட்பட பல்வேறு பிரிவுகளை இங்கு செயல்படுத்துவதோடு உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளையும் உருவாக்க முடியும். பல்நோக்கு மருத்துவ வளாகங்கள் தொடர்ந்து கட்டப்பட்டு வரும் நிலையில் சித்தாவுக்கு என தனியாக கட்டடம் அமைப்பதற்கான இடத்தை டீன் ரத்தினவேல் தேர்வு செய்ய வேண்டும். இந்திய மருத்துவத்துறை மூலம் கட்டுமானத்திற்கான நிதி பெறலாம் என்பதால் டீன் தாமதம் செய்யக்கூடாது.