UPDATED : ஜூலை 06, 2024 12:00 AM
ADDED : ஜூலை 06, 2024 09:49 AM

திண்டுக்கல்:
திண்டுக்கல் சிறுமலையில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்ட பல்லுயிர் பூங்கா 100 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் திறக்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் சிறுமலையில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க வெளி மாவட்டங்கள்,மாநிலங்களிலிருந்து ஏராளமான மக்கள் வருகின்றனர்.
இங்குள்ள கொண்டை ஊசி வளைவுகளில் நின்று மலைகளின் அழகை தான் ரசிக்க முடியுமே தவிர அவர்கள் பொழுதுபோக்கிற்காக எந்த வசதியும் அங்கு இல்லை. இதனால் மலை மேலே ஏறும் வேகத்தில் சுற்றுலா பயணிகள் கீழே இறங்கிவிடுகின்றனர்.
இதையறிந்த வனத்துறை நிர்வாகம் சிறுமலையில் பொது மக்கள் பொழுதுபோக்கிற்காக ரூ.5 கோடியில் பல்லுயிர் பூங்காவை அமைத்துள்ளனர். இந்த பூங்காவில் குழந்தைகளுக்காக சிறுவர் பூங்கா,பட்டாம்பூச்சி பூங்கா,கேண்டீன், உயர்கோபுரம், மர வீடு, மாஸ் கார்டன் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவில் தற்போது 100 சதவீதம் பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் சிறுமலை பல்லுயிர் பூங்கா திறக்கப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.