சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் பி.எஸ்சி., டிப்ளமோ நர்சிங் இழுபறி
சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் பி.எஸ்சி., டிப்ளமோ நர்சிங் இழுபறி
UPDATED : ஜூன் 11, 2024 12:00 AM
ADDED : ஜூன் 11, 2024 07:44 AM
சிவகங்கை :
தி.மு.க., ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் பி.எஸ்சி., மற்றும் டிப்ளமோ நர்சிங் படிப்பு துவக்கம், பல்நோக்கு மருத்துவமனை ஊழியர்கள் நியமனத்தை அரசு பல ஆண்டாக கிடப்பில் போட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கையில் 2012ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் தான், அரசு மருத்துவ கல்லுாரி துவக்கப்பட்டது. இக்கல்லுாரியில் ஆண்டிற்கு 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., முடித்து செல்கின்றனர்.
கல்லுாரிக்கான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதால், இங்கு 700 படுக்கைகள் மற்றும் 8 ஆப்பரேஷன் தியேட்டர்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இங்குள்ள மகப்பேறு வார்டில் அறுவை சிகிச்சை, எலும்பு மூட்டு, நரம்பியல் சார்ந்த பிரச்னைகளுக்கும் ஆப்பரேஷன் செய்யப்படுகிறது.
சிவகங்கை மருத்துவ கல்லுாரி துவங்கி 12 ஆண்டுகளை கடந்து விட்டது.
தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்கு தற்போது நடக்கும் தி.மு.க., ஆட்சி காலத்தில் கூட பி.எஸ்சி., மற்றும் டிப்ளமோ நர்சிங் படிப்பு துவக்குவதற்கான எந்த முயற்சியையும் அரசும், அதிகாரிகளும் எடுக்கவில்லை.
மருத்துவ கல்லுாரிக்கான வகுப்பறை, டாக்டர்கள் அறை கட்டும் போதே, இங்கு பி.எஸ்சி., நர்சிங் கல்லுாரி துவக்குவதற்கான வகுப்பறை, பேராசிரியர், மாணவிகள் விடுதிகளும் கட்டப்பட்டு, சிதிலமடைந்து வருகிறது.
பல்நோக்கு மருத்துவ ஊழியரின்றி அவதி
ஒவ்வொரு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும் பிளஸ் 2 முடித்து முறையான பயிற்சி பெற்ற, பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிவகங்கையில் கல்லுாரி துவக்கி 12 ஆண்டுகளை கடந்த பின்னரும், இக்கல்லுாரிக்கு தேவையான பல்நோக்கு மருத்துவ பணியாளர்களை நியமிக்கவில்லை.
இதனால், உள்நோயாளிகளை தினமும் சுத்தம் செய்தல், படுக்கைகளை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட நர்சுகளுக்கு உதவிகரமான பணிகளை செய்யும் பல்நோக்கு பணியாளர்களின்றி நர்சுகள் தான் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக சிவகங்கைக்கு பின் புதுக்கோட்டை, விருதுநகரில் துவக்கப்பட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் கூட தேவையான பல்நோக்கு மருத்துவ பணியாளர்களை நியமித்துள்ளனர்.
ஆனால், சிவகங்கைக்கு கடந்த 12 ஆண்டாக பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை.