கழிவுப்பொருட்களில் பன்நோக்கு ரோபோ: சிவகாசி அரசு பள்ளி மாணவர் சாதனை
கழிவுப்பொருட்களில் பன்நோக்கு ரோபோ: சிவகாசி அரசு பள்ளி மாணவர் சாதனை
UPDATED : நவ 26, 2026 04:29 PM
ADDED : நவ 26, 2026 04:30 PM
சிவகாசி:
'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு சார்பில் நடந்த தேசிய அளவிலான இளம் இந்திய விஞ்ஞானி போட்டியில் சிவகாசி ஆனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் லோகசூர்யா வெற்றி பெற்று இளம் விஞ்ஞானி விருது பெற்றார்.
போட்டியில் இப்பள்ளி ஆசிரியர் கருணைதாஸ் வழிகாட்டுதலின் கீழ், 9ம் வகுப்பு மாணவர் லோகசூர்யா கழிவுப் பொருட்களிலிருந்து 'பன்நோக்கு ரோபோ' என்ற புதிய அறிவியல் படைப்பை உருவாக்கினார்.
அதிகப் பொருட்செலவின்றி அட்டைப் பெட்டிகள், பி.வி.சி., குழாய்கள், எல்.இ.டி விளக்குகள், சிறிய மின்னணு உபகரணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ரிமோட் கண்ட்ரோல் ரோபோ வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்குத் தேவையான எழுதுபொருட்களை எடுத்துச் செல்லவும், மறுசுழற்சி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு நடந்த இறுதிச் சுற்றில் இந்தப் படைப்பு தேர்வு பெற்றது.
பரிசளிப்பு விழாவில், ககன்யான் விண்வெளித் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்வெளி வீரர் குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் இளம் விஞ்ஞானி கோப்பையை வழங்கினார்.
விருது வென்ற மாணவர் லோகசூர்யாவையும், வழிகாட்டிய ஆசிரியர் கருணைதாஸை முதன்மைக்கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
