கல்லுாரியில் தொழில் திறன் மேம்பாட்டு மையம் திறப்பு
கல்லுாரியில் தொழில் திறன் மேம்பாட்டு மையம் திறப்பு
UPDATED : அக் 17, 2026 04:29 PM
ADDED : அக் 17, 2026 04:30 PM
நத்தம்:
நத்தம் என்.பி.ஆர்., கல்விக் குழுமத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டுத்துறை சார்பில் என்.பி.ஆர்., பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில் தொழில் திறன் மேம்பாட்டு மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் கல்விசார் கூட்டமைப்பு பிரிவுத் தலைவர் சுசீந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரை கல்விக் குழுமத்தின் நிறுவன வளர்ச்சி, தொடர்புகள் இயக்குனர் ஆனந்த், கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள் வரவேற்றனர்.
தொழில் திறன் மேம்பாட்டு மையம், அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பு மையம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் ஐடியா ஆய்வகம் உள்ளிட்டவற்றை சிறப்பு விருந்தினர் பார்வையிட்டார். அவர் பேசுகையில், 'தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் மாணவர்கள் பாட அறிவுடன் நடைமுறை பயிற்சியையும் பெற வேண்டும்.
கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு மூலம் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு தேவையான திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள முடியும்' என்றார்.
இம்மையத்தின் மூலம் கணினி நிரலாக்கம், செயலி, இணையதள உருவாக்கம், செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி, தகவல் தொடர்புத் திறன், குழு விவாதம், நடத்தைத் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு வழிகாட்டுதலும் அளிக்கப்பட உள்ளது.
விழாவில் கல்விக்குழும இயக்குனர்கள், கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு பிரிவு இயக்குனர் அருணா நன்றி கூறினார்.
