UPDATED : மார் 31, 2026 10:58 PM
ADDED : மார் 31, 2026 11:01 PM

இன்று படிப்பில் எந்த பாகுபாடும் இன்றி, அனைத்து துறைகளையும் மாணவிகள் தேர்வு செய்து படிக்கின்றனர். அதேபோல், ஆண், பெண் என்ற பாலின பாகுபாடும் வேலை வாய்ப்பில் இல்லை.
அனைத்து துறைகளிலும் புதுமையும், புத்தாக்கமும் மிக முக்கியமானவை என்றபோதிலும், எந்த துறையாக இருந்தாலும் அடிப்படைகளை கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். அடிப்படையை அறிந்துகொள்ளாமல் எந்த துறையிலும் சாதிக்க முடியாது.
அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக, நமக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடும். ஏ.ஐ.,யின் வருகை, வேலையின் தன்மையை மாற்றி அமைக்கக்கூடும். ஆனால், அடிப்படையை எந்த புதிய தொழில்நுட்பத்தாலும் மாற்ற முடியாது. ஐ.டி., துறையை பொறுத்தவரை, நிறுவனங்கள் வலுவான 'கோடிங்' செய்பவர்களையே தேர்வு செய்யும் நிலையில், 'கோடிங்' அறிந்துகொள்ளாமல் அதிக ஊதியத்தில் வேலை பெறுவது சாத்தியம் இல்லை.
'ஹேக்கத்தான்' போட்டிகள் வாயிலாக, தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்குவதால், அத்தகைய போட்டிகளுக்கு தயாராகும் விதத்தில் மாணவர்கள் தயார்படுத்தப்பட வேண்டும். ஆகையால்தான், எங்கள் கல்வி நிறுவனத்தின் பல்வேறு துறைகளிலும் 'சென்டர் ஆப் எக்ஸ்லென்ஸ்' எனும் சிறப்பு மையங்களை ஏற்படுத்தி வருகிறோம். தொழில்துறை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், முதலாம் ஆண்டிலிருந்தே 'கோடிங்', தரவு கட்டமைப்புகள் மற்றும் அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கிறோம்.
தொழில்முனைவு மற்றும் புதிய 'ஸ்டார்அப்' நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதன் வாயிலாக, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். பட்டங்களை விட, திறன்களே மிக முக்கியமானவை.
சிறந்த தகவல் தொடர்புத் திறன் வேலை வாய்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பரந்த அளவிலான பல்வேறு திறன்களை கொண்டிருப்பதும் மிகவும் அவசியமாகிறது. ஆகவே, திறன் சார்ந்த பயிற்சிகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இண்டெல் மற்றும் சிஸ்கோ போன்ற நிறுவனங்களின் சிறப்பு மையங்களை ஏற்படுத்தி உள்ளோம்.
மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் பிரதான பங்கு வகிப்பதால், ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவது முதலில் மிக அவசியம்.
- இந்து முருகேஷன், துணை தலைவர், கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, கோவை.
