ஜல் நீட் அகாடமி விடுதிகளில் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு
ஜல் நீட் அகாடமி விடுதிகளில் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு
UPDATED : அக் 20, 2024 12:00 AM
ADDED : அக் 20, 2024 08:39 AM
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் மாணவர்கள் தாக்கப்பட்ட ஜல் நீட் அகாடமி நடத்தும் விடுதிகளில் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் என்பவர் திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் மருத்துவ நுழைவு தேர்வுக்கான ஜல் நீட் அகாடமி நடத்தி வருகிறார்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். வகுப்பறையில் துாங்கிய மாணவர்களை அவர் பிரம்பால் தாக்கிய சம்பவம் குறித்து புகார் எழுந்தது.
அங்கு வார்டனாக பணியாற்றி பின்னர் நீக்கப்பட்ட அமீர் உசேன் என்பவரது புகாரில் மேலப்பாளையம் போலீசார் ஜலாலுதீன் மீது இளஞ்சிறார்களை தாக்கியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
நேற்று முன்தினம் திருநெல்வேலியில் வழக்கமான விசாரணைக்கு வந்திருந்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், நீட் அகாடமி புகார் குறித்து அறிந்து மையத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
முன்னரே புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை விசாரணைக்கு வருமாறு அழைத்தார். இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரிப்பதாக தெரிவித்தார்.
அனுமதியற்ற விடுதிகள்
ஜல் நீட் அகாடமியில் படிக்கும் இருபாலருக்கும் அதே பகுதியில் திருமண மண்டபம் ஒன்றில் தனித்தனியே விடுதிகள் உள்ளன. அரசு அனுமதியின்றி நடத்தப்படும் அந்த விடுதியில் போதுமான வசதிகள் இல்லை. உணவும் வெளியில் இருந்து வரவழைக்கப்படுகிறது.
நேற்று மாவட்ட சமூக நல அலுவலர் தன்ஷிகா பேகம் மற்றும் தாசில்தார் இசைவாணி ஆகியோர் அங்குநேரில் ஆய்வு செய்தனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனிடையே மாணவர்களை தாக்கிய ஜல் நீட் அகாடமி உரிமையாளர் ஜலாலுதீன் தற்போது கேரளாவில் உள்ளதால் அவரை கைது செய்ய தனிப்படையினர் அங்கு சென்றுள்ளனர்.