UPDATED : ஜன 15, 2026 04:31 PM
ADDED : ஜன 15, 2026 04:38 PM
திருப்பூர்: திருப்பூர் நகர மற்றும் ஊரகப்பகுதிகளில், குப்பை மேலாண்மை என்பது, பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான விழிப்புணர்வை, பள்ளிகள் தோறும் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் ஊக்குவிப்பு வழங்குகிறது.
திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமல்படுத்தப்பட்டு, வீடு, வணிக நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட அனைத்து இடங்களில் இருந்தும், குப்பை தரம் பிரித்து வாங்குவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சி சார்பில், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில், திடக்கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதே போன்று, ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதன்படி, முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு மற்றும் முதலிபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில், 'மாறுவோம்; மாற்றுவோம்' என்ற பெயரில், அங்குள்ள பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர்கள் சங்கரநாராயணன், மதனகீர்த்தனா, முதலிபாளையம் நல்லுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
மாணவ, மாணவியருக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டு, 'பாலிதீன் கேரி பைகள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, துணிப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. இதே போன்று, அனைத்து கிராமப்புறங்களில் உள்ள ஊராட்சிப் பள்ளிகளில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

