தென்னிந்திய அறிவியல் கண்காட்சி புதுச்சேரி கவர்னர் துவக்கி வைப்பு
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி புதுச்சேரி கவர்னர் துவக்கி வைப்பு
UPDATED : ஜன 22, 2025 12:00 AM
ADDED : ஜன 22, 2025 08:46 AM

புதுச்சேரி:
புதுச்சேரியில் தென்னிந்திய அறிவியல் கண்காட்சியை கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை மற்றும் பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் இணைந்து நடத்தும், 2025ம் ஆண்டிற்கான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி, உப்பளம், பழைய துறைமுக வளாகத்தில் நேற்று துவங்கியது.
கண்காட்சியை கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அரசு செயலர்கள் ஜவஹர், நெடுஞ்செழியன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, தொழில்நுட்ப அருங்காட்சியக இயக்குநர் சஜூ பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் புதுச்சேரி, தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாநில அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
மாணவர் தனிப்பிரிவு - 15; குழுப்பிரிவு - 10; ஆசிரியர் பிரிவு - 10, என ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், 35 வீதம், மொத்தம், 210 அறிவியல் மாதிரிகள் மற்றும் கண்டுபிடிப்புகள், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டும் பல புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இப்படைப்புகளை பார்வையிட்ட கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அறிவியல் மாதிரிகளின் செயல்பாடு குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்து, அவர்களின் திறனை பாராட்டினர்.
கண்காட்சி வரும், 25ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது.