மாணவர்களுக்கு பணிவும் ஒழுக்கமும் அவசியம்: தென் மண்டல ஐ.ஜி., பேச்சு
மாணவர்களுக்கு பணிவும் ஒழுக்கமும் அவசியம்: தென் மண்டல ஐ.ஜி., பேச்சு
UPDATED : பிப் 04, 2026 12:55 PM
ADDED : பிப் 04, 2026 12:59 PM

கம்பம்: கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களிடம் பணிவும், ஒழுக்கமும் மிக அவசியம் என தென் மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி பேசினார்.
இப்பள்ளி ஆண்டு விழா தாளாளர் காந்த வாசன் தலைமையில் நடந்தது. இணைச்செயலர் சுகன்யா முன்னிலை வகித்தார். முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார்.
விழாவில் தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி பேசியதாவது:
தற்போது மாணவர்கள் கைகளில் உலகம் உள்ளது. இன்டர்நெட், அலைபேசிகள் மூலம் என்ன வேண்டுமோ அதைப் பற்றிய தகவல்களை திரட்ட முடியும். பாடங்கள் என்பது ஒரு வழி மட்டுமே. நீங்கள் என்னவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதற்காக முயற்சி செய்ய வேண்டும்.
நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும். நான் கம்ப்யூட்டர் இன்ஜினியர். சிவில் சர்வீஸ் தேர்வில் புவியியல், பொலிடிக்கல் சயின்ஸ் படித்தேன். ஒரே முறையில் தேர்வானேன். கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்.
ஆஸ்திரியா நாட்டில் ஒரு கிராம பகுதியில் நான் சென்று கொண்டிருந்த போது ரயில்வே கிராசிங்கில் 10 வயது சிறுமி சைக்கிளில் வந்தார். சிக்னல் ரெட் காண்பித்தது. இரண்டு பக்கமும் வாகனங்களே இல்லை. ஆனால் அந்த சிறுமி சிக்னலை கடந்து செல்லவில்லை. ரயில் சென்ற பின் மீண்டும் பச்சை விழுந்த பின் தான் சென்றார். எனவே, மாணவர்கள் வாழ்வில் ஒழுக்கம் வாழ்க்கையில் மிக முக்கியம். இவ்வாறு பேசினார்.

