UPDATED : டிச 07, 2025 01:39 PM
ADDED : டிச 07, 2025 01:40 PM
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு மற்றும் தென் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து நடத்தும் மண்டல சுற்றுச்சூழல் மாநாடு-2025 நேற்று தொடங்கியது.
தென் மாநிலங்கள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து இரண்டு நாள் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படுகிறது. தலைமை விருந்தினராக கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பாரம்பரிய முறைகளுக்குத் திரும்ப வேண்டும் எனவும், கடலோரப் பகுதிகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சட்டங்களுக்கும் நடைமுறைக்கும் இடையேயான பாகுபாட்டை சுட்டிக்காட்டி, சூழலியல் பாதுகாப்பில் தென் மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவுக் கூட்டாட்சி அவசியம் என கருத்துரைத்தார்.
கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, உலகளாவிய வனவிலங்கு சரிவு குறித்து கவலை தெரிவித்தார். தொடக்க அமர்வுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் சட்ட அமலாக்கம், திடக் கழிவு மற்றும் பயோமேடிக்கல் கழிவு மேலாண்மை, கடலோர மண்டல பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறுகின்றன.

