தமிழகம் உட்பட தென்மாநிலங்கள் பொருளாதார பங்களிப்பில் முன்னிலை
தமிழகம் உட்பட தென்மாநிலங்கள் பொருளாதார பங்களிப்பில் முன்னிலை
UPDATED : செப் 21, 2024 12:00 AM
ADDED : செப் 21, 2024 07:12 AM
புதுடில்லி:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் பெரும்பங்கு வகிப்பதாக, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாநில பொருளாதார செயல்பாடுகளை ஆராய்ந்து, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு, சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில் மாநிலங்களின் பொருளாதார நிலையில், பெரிய அளவிலான ஏற்றத் தாழ்வுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
நடப்பாண்டு மார்ச் மாத நிலவரப்படி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.
கடந்த 1991ம் ஆண்டுக்கு முன்பு வரை, தேசிய சராசரியைக் காட்டிலும் தென் மாநிலங்களின் தனி நபர் வருமானம் குறைவாக இருந்தது. பின், தாராளமயமாக்கல் காரணமாக, இந்த மாநிலங்கள் விரைவாக வளர்ச்சி அடைந்துள்ளன.
தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு தொழில்துறை வளர்ச்சியும்; கர்நாடகாவின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் முக்கிய பங்காற்றியுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு உதயமான தெலுங்கானா, சிறப்பான பொருளாதார செயல்பாட்டை வெளிப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து உள்ளது.
அதே வேளையில், கடந்த 1960 - 61களில், நாட்டின் பொருளாதாரத்துக்கு 10.50 சதவீத பங்களிப்பை வழங்கி, முன்னணி மாநிலங்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த மேற்கு வங்கம், தற்போது 5.60 சதவீத பங்களிப்பை மட்டுமே வழங்குகிறது. தேசிய சராசரியில் 127.50 சதவீதமாக இருந்த அம்மாநிலத்தின் தனிநபர் வருமானம், தற்போது 83.70 சதவீதமாக குறைந்துள்ளது.
இதையடுத்து, பல ஆண்டுகளாக தனிநபர் வருமானத்தில் பின்தங்கியுள்ள ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களுக்கும் கீழே மேற்குவங்கம் சென்றுள்ளது.
மகாராஷ்டிரா, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலம் என்ற பெருமையை தக்க வைத்தாலும், முன்பு 15 சதவீதமாக இருந்த அதன் பங்களிப்பு, தற்போது 13.30 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 1960 - 61ல் 14 சதவீத பங்களிப்பை வழங்கிய உத்தர பிரதேசம், தற்போது 9.50 சதவீதத்தை மட்டுமே வழங்குகிறது. மக்கள்தொகையின் அடிப்படையில், நாட்டின் மூன்றாவது பெரிய மாநிலமாக விளங்கும் பீஹார், வெறும் 4.30 சதவீத பங்களிப்பை மட்டுமே வழங்குகிறது.