சொற்பொழிவாளர் சர்ச்சை பேச்சு எதிரொலி ;அரசு பள்ளிகளுக்கு சி.இ.ஓ., அதிரடி உத்தரவு
சொற்பொழிவாளர் சர்ச்சை பேச்சு எதிரொலி ;அரசு பள்ளிகளுக்கு சி.இ.ஓ., அதிரடி உத்தரவு
UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 09:03 AM

கோவை:
சென்னை அரசு பள்ளியில், சொற்பொழிவாளரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சொற்பொழிவாளர் மகா விஷ்ணு என்பவர் மாணவ, மாணவியரிடையே சொற்பொழிவாற்றினார்.
மகா விஷ்ணுவின் பேச்சுக்கும், செயலுக்கும் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர், எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சொற்பொழிவுக்கு அனுமதி அளித்த தலைமையாசிரியை, இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தினால், பங்கேற்பாளர்கள் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பித்து, முன் அனுமதி பெற வேண்டும் என, அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி அதிகாரிகள் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(சி.இ.ஓ.,) பாலமுரளி கூறுகையில், பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோரின் விபரங்களை சமர்ப்பித்து,என்னிடம் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.